Skip to main content

குடும்பத்தின் ஆட்சேபனையை மீறி மன்மோகன் சிங்குடன் புகைப்படம் எடுத்த மத்திய அமைச்சர்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

manmohan singh

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று முன்தினம் (13.10.2021) மாலை டெங்கு காய்ச்சல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மன்மோகன் சிங்கை பார்த்தனர்.

 

பின்னர் அவர் மன்மோகன் சிங்கை பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத்தொடர்ந்து மன்சுக் மாண்டவியா அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

 

இந்தநிலையில் தங்களது ஆட்சேபனையை மீறி மன்சுக் மாண்டவியா, மன்மோகன் சிங் இருந்த அறையில் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “என் தந்தை எய்ம்ஸில் டெங்குவுக்கு சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் பார்வையாளர்கள் வருவதைக் கட்டுப்படுத்தியுள்ளோம். சுகாதார அமைச்சர் வருகை தந்து தனது கவலையை வெளிப்படுத்தியது நல்ல விஷயமாக இருந்தது. எனினும், அந்த நேரத்தில் எனது பெற்றோர் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தனர்.

 

புகைப்படக்காரர் அறையைவிட்டு வெளியேற வேண்டும் என்று என் அம்மா வலியுறுத்தினார். ஆனால் அவர் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டார். அவர் மிகவும் வருத்தபட்டார். எனது பெற்றோர்கள் கடினமான சூழ்நிலையை சமாளிக்க முயல்கிறார்கள்.”

இவ்வாறு தமன் சிங் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்