காவல்துறைக்கே தெரியாமல் பீகார் மாநிலத்தில் போலி காவல்நிலையம் செயல்பட்டு வந்துள்ளது.
காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உண்மையான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது காவல் நிலையத்தில் சுமார் ஐந்து பேர் போலி காவல் சீருடையில் பணியில் இருப்பதுபோல் இருந்துள்ளனர். அவர்களை விசாரித்த போது தங்களை போலா யாதவ் என்பவர் தேர்ந்தெடுத்ததாகவும், இதற்காக அவருக்கு 70,000 ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர். இவர்களுக்கு தினந்தோறும் 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. பாட்னா ஸ்க்வாட் டீம் எனப் பெயர் வைத்துக்கொண்டு அரசு கட்டுமானங்களுக்குச் சென்று விசாரணை நடத்தி பணம் வசூலிப்பது, சிறு வியாபாரிகள், வியாபாரம் நடத்துவோர் ஆகியோரிடமும் பணம் வசூலிப்பது போன்ற குற்றங்களைச் செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த ஐவரை கைது செய்த போலீசார் அவர்களின் பாட்ச்கள், சீருடைகள், கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.