சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்ததன் விளைவால், கேரளாவில் முதல் முறையாக பா.ஜ.க கால் பதித்தது.
கேரளாவின் ஒரே ஒரு எம்.பியான சுரேஷ் கோபிக்கு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்ற சுரேஷ் கோபி, திருச்சூரில் உள்ள மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் கேரள முதல்வருமான கருணாகரனின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஈ.கே.நாயனார் மற்றும் கே.கருணாகரன் ஆகியோர் எனது அரசியல் குருக்கள். இந்திரா காந்தியை இந்தியாவின் தாயாகப் பார்ப்பது போல், கருணாகரனின் மனைவியை நான் அம்மா என்று தான் அழைப்பேன்.
எனது தலைமுறையில் கருணாகரனை, நான் மிகவும் மதிக்கும் துணிச்சலான தலைவர். அதனால், அவர் சார்ந்த கட்சி மீது எனக்கு ஒரு விருப்பம் இருக்கும். ஒரு இந்தியனாக, நாட்டிற்காக நிற்கும் ஒரு மனிதனாக, எனக்கு மிகத் தெளிவான அரசியல் உள்ளது. அதை உடைக்கக் கூடாது. ஆனால் மக்கள் மீது நான் வைத்திருக்கும் மரியாதை என் இதயத்திலிருந்து வருகிறது. அதற்கு நீங்கள் அரசியல் சாயம் பூசக்கூடாது. இந்திரா காந்தி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த கே.கருணாகரன், கேரளாவுக்கு சிறந்த நிர்வாக பலன்களைப் பெற்று தந்துள்ளார்” என்று கூறினார். பா.ஜ.கவைச் சேர்ந்த சுரேஷ் கோபி, காங்கிரஸ் தலைவரையும், இந்திரா காந்தியையும் புகழ்ந்தது, பா.ஜ.கவினரிடையே பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, சுரேஷ் கோபி கூறிய தனது கருத்துக்கு நேற்று (16-06-24) விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் என்ன சொன்னேன்? காங்கிரஸைப் பொறுத்த வரையில், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கே.கருணாகரன் தான் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தந்தை . இந்தியாவில் அதன் தாய் இந்திரா காந்தி. இதை நான் என் இதயத்திலிருந்து சொன்னேன். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் உண்மையான சிற்பியாக இந்திரா காந்தி இருந்தார். அரசியல் போட்டிகள் கட்சியில் இருக்கிறது என்பதால் நாட்டுக்காக உண்மையாக உழைத்த ஒருவரை என்னால் மறக்க முடியாது” என்று கூறினார்.