புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணிக்குக் காங்கிரஸ் கட்சி தான் தலைமை ஏற்கும் என்றும், அவ்வாறு ஏற்காவிட்டால் தனித்து நிற்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “மறைந்த யானை லட்சுமிக்கு முதல்வர் ரங்கசாமி அஞ்சலி செலுத்தாதது புதுச்சேரி மக்களுக்குச் செய்த துரோகம். மணக்குள விநாயகர் கோவிலுக்கு புதிய யானையை வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யானை இறந்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஆனால் வழக்கறிஞர் நியமனத்தில் தனக்குத் தொடர்பு இல்லை என்று ஆளுநர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடாது. தி.மு.க தலைமைக்குப் புதுச்சேரி தி.மு.க எப்படிக் கட்டுப்பட்டு நடக்கிறதோ அதுபோன்று காங்கிரஸ் கட்சியும் தலைமைக்குக் கட்டுப்பட்டுத் தான் நடக்கும். மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி சார்பில் போராட்டம் நடந்தால் அதற்குக் காங்கிரஸ் கட்சி தான் தலைமை ஏற்கும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வலிமை உள்ளது. எனவே எந்த கட்சியையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. தேவைப்பட்டால் தனித்து நிற்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்” என்றார்.