38 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஒருவர் பள்ளியில் படித்த மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு பதிவின் மூலமாக அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருப்பவர் சசிகுமார். இவர் அங்குள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். சுமார் 38 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்த இவர் சில தினங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். 'ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்த நான் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்' என ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சசிகுமார், தான் ஓய்வுபெற்று விட்டதாக அவர் போட்டிருந்த ஃபேஸ்புக் பதிவை பார்த்த அவரிடம் பயின்ற முன்னாள் மாணவிகள் பள்ளிப் பருவத்தில் தாங்கள் ஆசிரியர் சசிகுமாரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாகக் கருத்து தெரிவித்தனர்.
இந்த ஃபேஸ்புக் பதிவுகள், கமெண்ட்டுகள் வைரல் ஆன நிலையில் முன்னாள் மாணவிகள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சசிகுமார் மீது மலப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேபோல் சசிகுமாரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான 2 மாணவிகள் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கங்களை அளித்தனர். அதில், 'அவர் ஆசிரியராக இருந்தபோதும், தலைமை ஆசிரியராக இருந்தபோதும் அவர் பள்ளியில் பயின்ற பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். பாலியல் அத்து மீறல்கள் தொடர்பாக பள்ளியில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகளிடம் புகார் அளித்த நிலையிலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் மாணவிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சசிகுமார் தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் சசிகுமாரை கைது செய்தனர்.