
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையின் அதிகாரங்களை உறுதி செய்த தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவிக்கைப் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் குறித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் சார்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தினேஷ் மகேஸ்வரி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன் வைக்க முயன்ற போது, கருப்புப் பண ஒழிப்பு மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு தாங்கள் முற்றிலும் ஆதரவாக இருப்பதாகவும், அத்தகைய குற்றங்களை நாடு தாங்காது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். விரிவான வாதம் எதுவும் தேவையில்லை; ஆனால் இந்த விவகாரத்தில் சில பிரச்சனைகளை மட்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உணர்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, புகாரின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும் பொழுது, அந்த நபருக்கு ECIR வழங்கப்படாமல் இருப்பது என்ற அம்சத்தையும், ஒருவர் குற்றமற்றவராக இருக்கலாம் என்ற அனுமானத்தை நிராகரிக்க அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஆகிய இரண்டு அம்சங்களை மீண்டும் மறு ஆய்வு செய்யவிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல; எனவே, வழக்கை விசாரிக்கத் தேவையில்லை என்று கூறினார். எனினும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நான்கு வாரத்திற்கு பிறகு வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.