கேரளாவில் சுமார் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சோதனையின் அடிப்படையில் மீண்டும் கேரள மாநிலத்தில் 12 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலப்புரம், எர்ணாகுளம், வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. முன்னாள் நிர்வாகி ஜமால் முகமது, லத்தீப் உள்ளிட்டோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த பிறகும் அதன் நிர்வாகிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து உதவிகள் வருவதாகவும் கிடைத்த தகவல் அடிப்படையில் வங்கி கணக்குகள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.