தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறைப் பதிவு செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016- ஆம் ஆண்டு தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையை நடத்தியது. இந்த சோதனையின் போது, 147 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 34 கோடி ரூபாய்க்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்களும், 178 கிலோ தங்கமும் சிக்கியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சேகர் ரெட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையின் விசாரணையைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து தொழிலதிபர் சேகர் ரெட்டி சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று (05/05/2022) விசாரணைக்கு வந்த போது, விசாரித்த நீதிபதிகள், தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பதாகவும், அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துச் செய்யவதாகவும் கூறி, அமலாக்கத்துறையின் மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.
முன்னதாக, சி.பி.ஐ. இந்த விவகாரத்தில் சேகர் ரெட்டிக்கு எதிரான எந்தவிதமான ஆதாரமும் இல்லையென கூறி வழக்கை முடித்து வைத்திருந்து. இதன் அடிப்படையில், அமலாக்கத்துறையின் வழக்கையும் ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் சேகர் ரெட்டி தரப்பில் வாதிடப்பட்டது. இதனையேற்ற நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்துள்ளனர்.