இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம் 'சொமாட்டோ' ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியான ஹரியானா மாநிலம் குருகிராமில் பணிபுரிந்து வந்த 540 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'சொமாட்டோ' நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 10% ஊழியர்களை நீக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கு 2 முதல் 4 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
'சொமாட்டோ' நிறுவனம் சில தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றங்களை முன்னெடுத்தது. இதன் காரணமாகவே வாடிக்கையாளர் சேவையில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பணி குறைக்கப்பட்டது. ஆகவே இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை நீக்க சொமாட்டோ நிறுவனம் முடிவு எடுத்தது. ஏற்கனவே கடந்த மாதம் இந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 60 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'சொமாட்டோ' நிறுவனத்தின் நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் தங்களது நிறுவனத்தில் தொழில் நுட்ப பிரிவில் அதிகளவில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.