கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி இரவு கடும் மழை பெய்த நிலையில், 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் முண்டக்கை என்ற மலைக்கிராமத்தில் திடீரென நிலச்சரிவும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால் மூன்று கிராமத்தில் வசித்த மக்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது.
மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணுக்குள் புதைந்தும் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலரின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. பேரிடர் மீட்புக் குழு, காவல்துறை , இந்திய ராணுவம் என அனைத்து துறைகளும் ஒன்றாக சேர்ந்து மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. நிமிடத்திற்கு நிமிடம் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்; பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்; குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து தவிக்கும் உறவுகள் என கேரள மாநிலம் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், உயிர்பிழைத்தவர்கள் பலரும் தாங்கள் மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், நிலச்சரிவில் இருந்து உயிர்பிழைத்த பாட்டி சுஜாதா, “நிலச்சரிவின் போது இடிந்து விழுந்த எனது வீட்டில் இருந்து என்னுடைய பேத்தியைத் தூக்கிக்கொண்டு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு ஓடினேன். ஆனால் அங்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மூன்று காட்டு யானைகள் நின்றன. நான் அவைகளைப் பார்த்து, ‘நாங்கள் சாவில் இருந்து மீண்டு வந்துள்ளோம். எங்களை விட்டுவிடு; ஒன்றும் செய்திடாதே..’ என்று கெஞ்சினேன்.
அப்போது, முன்னால் இருந்த யானை கண்கலங்கியதைப் பார்த்தேன். பிறகு நானும், என் பேத்தியும் அந்த யானையின் காலடியில் அமர்ந்துவிட்டோம். இரவு முழுவதும் அங்கேயே இருந்தோம். மறுநாள் காலையில் மீட்புப் படையினர் வரும் வரை 3 யானைகளும் எங்களைப் பாதுகாத்தன. எந்த கடவுள் எங்களை காப்பறியதோ தெரியவில்லை” எனக் கண்ணீர் மல்க உருக்கமாகத் தெரிவித்தார்.