ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (25.06.2024) நடைபெறுகிறது. இதனையொட்டி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசினார். அப்போது, சபாநாயகர் தேர்தலை போட்டியின்றி ஒருமனதாக நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் சபாநாயகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் பாரம்பரியம் தொடர வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங். இதற்கிடையே மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்பிகளில் ஒருவரும் முன்னாள் மக்களவை சபாநாயகருமான ஓம் பிர்லா தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “சபாநாயகராகப் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று ராஜ்நாத் சிங்கிடம் கூறியுள்ளோம். ஆனால் துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ராஜ்நாத் சிங், மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்து சபாநாயகருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். எனவே சபாநாயகர் வேட்பாளரை ஆதரிப்போம். மேலும் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனக் கூறினோம். ஆனால் இதுவரையில் எந்த பதிலும் வரவில்லை. எதிர்க்கட்சிகளை மோடி அரசு அவமதித்துவிட்டது” எனத் தெரிவித்தார். இதனால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்ட தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் 18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். துணை சபாநாயகர் பதவியை மரபுப்படி எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக மறுத்துவிட்டது. இதனால் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு அளிக்காமல் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை (26.06.2024) சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.