Skip to main content

கடும் எதிர்ப்புக்கிடையே தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

LOK SABHA

 

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க வழிவகை செய்யும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. 

 

தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது, வாக்காளர்களின் தனியுரிமையை மீறும் செயல் என்றும், தரவு பாதுகாப்பு மசோதா இன்றி அரசு இந்த மசோதாவைத் திணிக்க முடியாது என்றும் கூறிய காங்கிரஸ், இந்தச் சட்டத்தை நிலைக்குழுவிற்கு அனுப்பக் கோரியது. மேலும், ஆதார் சட்டம் ஆதாரையும் வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்க அனுமதிக்கவில்லை என்றும் ஆதாரை நலத்திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் காங்கிரஸ் தெரிவித்தது.

 

அதேபோல் ஒவைசி, இந்தச் சட்டம் வாக்குரிமையை மறுக்க அரசாங்கத்தை அனுமதிக்கும் என்றும், இந்த ஆபத்தான திட்டம் வாக்குகளின் இரகசிய தன்மையை சேதப்படுத்தும் என்றும் தெரிவித்தார். மேலும், திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

 

இருப்பினும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சிகளை மீறி தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதவை தாக்கல் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இரண்டு மணிக்கு அவை கூடியபோது லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

 

இதன்பின்னர் மீண்டும் அவை கூடியபோது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பவே, மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்