/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eknath43534.jpg)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (04/07/2022) நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
சிவசேனா கட்சியின் தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தலைமையிலான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவை அடங்கிய மகா அகாஸ் விகாதி அரசு மீது சிவசேனா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 35- க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியிருந்தனர். இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்றத்தின் பலம் 288 ஆக உள்ள நிலையில், பா.ஜ.க.விடம் 106 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிவசேனா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட சுமார் 50- க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 144 என்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 160- க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)