ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று (01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்து சுனாமி எச்சரிக்கை அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டிருந்தது. அதில், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சுனாமியானது, சுமார் 5 மீட்டர் உயரத்துக்குத் தாக்கக்கூடும் என்றும் கூறியிருந்த நிலையில், 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அந்தமான் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. கேம்ப்பெல் பே இல் என்ற இடத்திலிருந்து 487 கிலோ மீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தில் உள்ள அலிபுர்துவார் என்ற இடத்தில் 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் அளவில் பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பிற்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.