The driver challenged the YSR party MLA

Advertisment

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் உள்ளது புட்டபர்த்தி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ரெட்டி. அரசியல்வாதியான இவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார். அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவருக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக புட்டபர்த்தி தொகுதியில் சீட் கொடுத்துள்ளனர். அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகஉள்ளார். இதன் காரணமாக ஸ்ரீதர் ரெட்டி இந்தத் தொகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்க நபராக இருந்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஸ்ரீதர் ரெட்டிக்கு ஏராளமான பணியாளர்கள் இருந்துள்ளனர். அதில், கார் ஓட்டுநராக பங்கர்ராஜூ மகேஷ்வர் ரெட்டி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாகஸ்ரீதர் ரெட்டியிடம் வேலை பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த டிரைவர், ஸ்ரீதர் ரெட்டி மீது மிகுந்த விசுவாசமாகவும், மரியாதையாகவும் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், திடீரென ஒரு சில காரணத்தால் எம்.எல்.ஏ ஸ்ரீதர் ரெட்டிக்கும் ஓட்டுநர் பங்கர்ராஜூ மகேஷ்வர் ரெட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரிடம் இருந்து திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார் ஓட்டுநர். இது குறித்து அவரின் நண்பர்கள் சிலர் டிரைவரிடம் கேட்டபோது, சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ரெட்டி மிகவும் மோசமானவர் என்றும், அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடமும் ஸ்ரீதர் ரெட்டியால் தான் ஏமாற்றப்பட்டதாகவும்அவர் நல்லவர் இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

இதனால், சில சமயம் ஸ்ரீதர் ரெட்டியின் ஆதரவாளருக்கும் இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சட்டமன்ற உறுப்பினரான ஸ்ரீதர் ரெட்டியை கடுமையாக விமர்சிக்கும் போதெல்லாம், இவரால் நான் மட்டும் பாதிக்கப்படவில்லை எனவும், ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இதனைக் கேட்டு எரிச்சலடைந்த இவரின் நண்பர்கள் சிலர், எம்.எல்.ஏ.வை எதிர்த்து உன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீதர் ரெட்டி மீது நீ என்னதான் குறை சொன்னாலும்மறுபடியும் அவர்தான் இந்தத் தொகுதிக்கு எம்.எல்.ஏ ஆவார் என்றும் கூறியிருக்கின்றனர். இதனால் கடுப்பான ஓட்டுநர் மகேஷ்வர் ரெட்டி, இந்தத் தொகுதியில் கண்டிப்பாக இவருக்கு மறுபடியும் சீட் கொடுக்க மாட்டார்கள் எனக் கூறியிருக்கிறார். ஆனால், இவர் சொல்வது எதுவும் நடக்காது என அவரின் நண்பர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். அப்போதுஆவேசமான மகேஷ்வர் ரெட்டி, மறுபடியும் புட்டபர்த்தி தொகுதியில் ஸ்ரீதர் ரெட்டிக்கு சீட் கொடுத்துவிட்டால் நான் ஒரு பக்கம் மொட்டையடித்துக் கொள்கிறேன் எனவும், ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்கிறேன் எனவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இதனை நான் உறுதியாகத்தான் சொல்கிறேன் என உறுதியளித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ஸ்ரீதர் ரெட்டிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஓட்டுநர், அவர் சவால் விட்டது போன்றுபுட்டபர்த்தியில் உள்ள சத்தியம்மா கோயில் முன்பு பாதி மொட்டையடித்துக் கொண்டார். மேலும், பாதி மீசையையும் எடுத்துக் கொண்டார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ஸ்ரீதர் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், அவர் வெற்றி பெற்றால் தன்னைப் போல் மேலும் பலர் ஏமாற்றப்படுவார்கள் என்றும் ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார். இந்நிலையில், டிரைவர் மகேஷ்வர் ரெட்டி பாதி மொட்டையடித்து பாதி மீசை எடுத்துக்கொண்டு பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.