அண்மைக் காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆயுதங்களுடன் நடந்து வருவது, தாக்குவது, வீலிங் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், கள்ளு குடிப்பது போல் வீடியோ எடுத்து வெளியிட்ட இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே கள்ளுக் கடைக்கு தோழிகளுடன் சென்ற அஞ்சனா என்ற இளம்பெண் கள்ளு குடிப்பது போல் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இக்காட்சிகள் வைரலான நிலையில் கேரளா சுங்கத்துறை அதிகாரிகள் அந்த இளம்பெண் அஞ்சனாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டில் இருந்த கணவர் தாய் நாட்டிற்கு திரும்பியதை கொண்டாட அஞ்சனாவின் தோழி கள்ளுக் கடையில் ட்ரீட் வைத்துள்ளார். அப்பொழுது விளையாட்டாக, தான் கள்ளு குடிப்பதை வீடியோ எடுத்த அஞ்சனா அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். கள்ளுக்கு விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் அவரை அதிகாரிகள் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.