இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மிகத்தீவிரமாகப் பரவிவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்தநிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும் (DRDO), டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனமும் இணைந்து தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையிலான பவுடர் வடிவிலான மருந்து ஒன்றை உருவாக்கியது. சமீபத்தில் இந்த மருந்திற்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 2DG பவுடர் என அழைக்கப்படும் இந்த மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் இந்த மருந்தைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர். இந்தநிலையில், இந்த மருந்து தொடர்பாக டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2DG பவுடரை, மிதமான கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கும் மட்டுமே, அதுவும் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். 2DG பவுடர் இன்னும் பொதுச்சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. அதற்கான விலையும் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான இந்த மருந்தின் வணிக ரீதியிலான விற்பனை ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2DG பெயரில் போலியான மற்றும் சட்டவிரோதமான பொருட்களை விற்பவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் வரும் 2டிஜி தொடர்பான உறுதிப்படுத்தப்படாத செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்" என கூறப்பட்டுள்ளது.