கொரோனா நோற்தொற்றுக் காலங்களில் அதிகமாக விற்ற மாத்திரை டோலோ 650. கொரோனா காலங்களில் மட்டும் விற்ற டோலோ 650 மாத்திரைகளை அடுக்கினால் புஜ் கலீபாவை விட அதிகமாக இருக்கும் என பெருமை பேசப்பட்டது. 2019 முதல் 2021 டிசம்பர் வரை மட்டும் இந்நிறுவனம் 350 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு அந்நிறுவனம் 1000 கோடி வரை செலவிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில் உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில் "தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில் விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடுதல், போன்ற குற்றச் செயல்களுக்கு அந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது காய்ச்சலுக்கு அளிக்கப்படும் டோலோ 650 மாத்திரைகளை நோயாளிகளுக்கு அதிக அளவில் பரிந்துரைப்பதற்காக அந்நிறுவனம் 1000 கோடி ருபாய் வரை மருத்துவர்களுக்கு வழங்க அந்நிறுவனம் செலவிட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் ஆஜர் ஆன மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி சந்திர சூட் "கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட போதும் தனக்கு அந்த மாத்திரைகள் தான் வழங்கப்பட்டது என கூறி இது மிகத் தீவிரமான பிரச்சனை இதை உடனடியாக கவனிக்க வேண்டும்" என கூறினார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.