உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,902 ஆகவும், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆகவும் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பற்றி மோடி பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரின் இந்த பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மற்றொரு பக்கம் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்களின் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காகவும், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவும் மோடி விளக்கேற்றும்படி கூறியுள்ளார் என்று பலர் ஆதரவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நாளை இரவு தெரு விளக்குகளையும், மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் பயன்படுத்தப்படும் விளக்குகளையும் அணைக்கக் கூடாது என்று மத்திய அரசு தற்போது வலியுறுத்தியுள்ளது.