காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு, காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் குடிநீர் பிரச்சனை, நீர்ப்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவைப் பின்பற்ற இயலாது; 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விட முடியும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது.
இதனிடையே காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேலும், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது எனக் கடந்த 21 ஆம் தேதி தெரிவித்தது. அந்த தீர்ப்பை ஏற்றுக் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைத் திறந்து விட்டது.
இதனால், கர்நாடக அரசைக் கண்டித்து அந்த மாநிலத்தில் கர்நாடக அமைப்புகள், விவசாயிகள் மற்றும் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 22 ஆம் தேதி மண்டியா, அத்திப்பள்ளி டோல்கேட், கிருஷ்ணராஜபுரம், மைசூரு வங்கி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக கர்நாடகாவில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாளை (25-09-23) பெங்களூருவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “தற்போதைய சூழ்நிலையில் காவிரி நீர் திறப்பது கடினம். ஆனால், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும். அரசியல் கோணத்தில் சிலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால் என்ன கிடைக்கப் போகிறது? கர்நாடகா விவசாயிகளின் நலன்களையும், மாநிலத்தின் நலன்களையும் பாதுகாக்க அரசு இருக்கிறது. அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் போராட்டக்காரர்கள் செயல்பட்டு வருகின்றனர். பிராண்ட் பெங்களூர் திட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது. எனவே, முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.