டெல்லி, ஹரியானவை சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா (27). இவர் கடந்த 2 ஆம் தேதி குருகிராமில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலை இரண்டு நபர்கள் ஓட்டலிலிருந்து இழுத்துச் சென்று, காரில் ஏற்றும் சிசிடிவி காட்சி வெளியானது. இதையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஓட்டலின் உரிமையாளர் அபிஜித் சிங் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், அபிஜித் சிங்கின் ஆபாச வீடியோக்களை காட்டி திவ்யா அவரை மிரட்டி வந்ததாகவும், அதன் காரணத்தால்தான் அபிஜித் சிங் திவ்யாவை கொலை செய்தது தெரிய வந்தது. ஆனால் திவ்யாவின் குடும்பத்தார் இதை மறுத்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அபிஜித் சிங்கின் நெருங்கிய நண்பரான பல்ராஜ் கில் என்பவரை கடந்த 11 ஆம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திவ்யாவின் உடலை அபிஜித் சிங் அப்புறப்படுத்த சொன்னதால், ஓட்டலில் இருந்து 150 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பக்ராவில் உள்ள கால்வாயில் வீசியதாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றினர். குளிரின் காரணமாக உடல் அழுகவில்லை என்று கூறிய அவர்கள், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு திவ்யாவின் குடும்பத்தார், உடலில் இருக்கும் இரண்டு டாட்டூக்களின் அடையாளம் கண்டு இது திவ்யாவின் உடல் என உறுதி செய்துள்ளனர். மேலும் அபிஜித் சிங், பல்ராஜ் கில் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திவ்யா பஹுஜா, கடந்த 2016 ஆம் ஆண்டு குருகிராம் பகுதியின் ரவுடியான சந்தீப் கடோலியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.