கர்நாடகா மாநிலத்தில் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் கடந்த 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதில் தேசிய அளவிலான சதி இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில், தேசிய புலனாய்வுத் துறையின் அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஷெரீக் என்பவரின் மீது வெடிகுண்டு தயாரிப்பதற்காக வெடி பொருட்களை வாங்கி பதுக்கி வைத்திருந்தது, அதேபோல் தேசியக் கொடியை எரித்தது, நாட்டுக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் அடங்கிய குறிப்புகளை வைத்திருந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு ஏற்கனவே கர்நாடக காவல்துறை ஷெரீக் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது முதல் தகவல் அறிக்கையின் வாயிலாகத் தெரிய வந்தது.
அண்மையில் தமிழகத்தின் கோவையில் அக்டோபர் 23ஆம் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபீன் என்ற நபர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது தொடர்பாகவும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. கோவை கார் வெடிப்பில் பலியான முபீனும் மங்களூர் குக்கர் வெடிகுண்டு குற்றவாளி ஷெரீக்கும் ஒரே நேரத்தில் கேரளாவில் இருந்துள்ளது தெரியவர, இருவரும் சந்தித்துக் கொண்டனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கேரள காவல்துறை தீவிரவாத தடுப்பு குழு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மங்களூர் குற்றவாளி ஷெரீக் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை கோவையில் இருந்துவிட்டு பின்னர் மதுரை, நாகர்கோவில் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேபோல் ஷெரீக் செப்டம்பர் 13 முதல் 18ஆம் தேதி வரை கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஆலுவா பகுதியில் இருந்தது தெரிய வந்துள்ளது. கோவையில் அக்டோபர் 23ஆம் தேதி கார் வெடிப்பில் உயிரிழந்த முபீனும் செப்டம்பர் மாதம் மத்தியில் கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் ஷெரீக் கோவையில் இருந்த பொழுது முபீனை சந்திக்கவில்லை என தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் கேரளாவில் இவர்கள் சந்தித்திருக்க வாய்ப்பிருக்குமோ என்ற கோணத்தில் கேரள காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மங்களூர் சம்பவத்திற்கு 'இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.