துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவின் நெருங்கிய நண்பராகவே இருந்துள்ளார். இந்தியா, ஜப்பான் உறவை அடுத்தகட்டத்திற்கு மிக வேகமாக எடுத்துச் சென்றவர் ஷின்சோ அபே என்றால் அது மிகையாகாது. சீனா எதிர்ப்பு, வலுவான தேசியவாத கொள்கை, அமெரிக்கா நெருக்கம் உள்ளிட்டவை அவரை இந்தியாவோடு இன்னும் நெருக்கமாக்கியது ஜப்பான் போன்ற இந்தியா தவிர, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஜனநாயக நாடுகளை குவாட் அமைப்பின் மூலம் ஒன்றிணைப்பதில் அபே முக்கிய சக்தியாக இருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் அபேவின் நெருக்கம், மிக முக்கியமானது எந்த அளவிற்கென்றால், ஜப்பான் சென்றிருந்த போது, அபே தனது குடும்பத்திற்கு சொந்தமான பாரம்பரிய வீட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளித்தார். வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு அங்கு விருந்தளித்தது அதுவே முதல்முறை.
கடந்த 2017- ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீனப்படைகள் மோதிக் கொண்ட போதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போதும், இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே ஜப்பான் எடுத்தது. மேலும், சீனாவின் நடத்தைக் குறித்து பகிரங்கமாக விமர்சித்த ஜப்பான், எல்லையில் பழைய திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
பல ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை அதிகரித்தன. ஜப்பானில் புதிதாக நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆணையத்துடன், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அடிக்கடி ஆலோசனை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்திய கடற்படையும், ஜப்பானிய கடற்படையும் கடந்த 2013- ஆம் ஆண்டு சென்னை அருகே கடலில் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இப்படி இருநாட்டு உறவுக்கும் பாலமாக இருந்தவர் ஷின்சோ அபே.