மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 26ஆம் தேதியோடு விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்தன. இருப்பினும் மத்திய அரசு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் விவசாயிகளும் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை வீடு திரும்பப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.
இந்தநிலையில், தங்கள் போராட்டம் தொடங்கி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி, விவசாயிகள் இரண்டு நாள் அகில இந்திய மாநாட்டை நடத்தினர். 22 மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாடு நேற்று (27.08.2021) முடிவடைந்தது.
இதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்தும் 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, செப்டம்பர் 25ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்த ஆஷிஷ் மிட்டல், "செப்டம்பர் 25ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கிறோம். கடந்த வருடமும் அதே நாளில் (செப்டம்பர் 25) ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. கரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைவிட அடுத்த மாதம் நடத்தவுள்ள போராட்டம் பெரும் வெற்றியைப் பெறும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.