ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று அரசியலமைப்பு சட்டத்தின் 370வது கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய பா.ஜ.க அரசு ரத்து செய்தது. அதனை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்த நடவடிக்கைகளுக்கு முன்பே ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர். அதன் பின்னர், ஒவ்வொருவரையும் நீண்ட நாள் கழித்து விடுவித்தனர்.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு, பதற்ற நிலை காரணமாக அங்கு 10 வருடமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், தான் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு, அம்மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டு வந்தது. அதே போல், காங்கிரஸ் கட்சி அம்மாநில கட்சியான தேசிய மாநாட்டு கட்சியோடு இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்டது.
அதன்படி, ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 63.88% வாக்குகள் பதிவான அந்த தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தல் முடிவுகளில், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி, பெரும்பான்மைக்கும் அதிகமாக இடங்களான 49 இடங்கள் கைபற்றியது. அதே வேளையில், பா.ஜ.க 29 இடங்களிலும், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதிக இடங்களை தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி கைப்பற்றியதால், ஜம்மு காஷ்மீரின் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா தகவல் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, நடைபெற்ற தேசிய மாநாட்டு கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் செயல் தலைவரான உமர் அப்துல்லா, குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 4 பேர் அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தனர். இதனால், அக்கட்சியின் பலம் 46ஆக அதிகரித்திருக்கிறது. அதன்படி, உமர் அப்துல்லா கடந்த 11ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை சந்தித்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (13-10-24) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, இரண்டாவது முறையாக உமர் அப்துல்லா பதவியேற்கவுள்ளார். உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பதன் மூலம், அங்கு மீண்டும் மக்களாட்சி நடைபெற இருக்கிறது.