உலகை அச்சுறுத்திவரும் கரோனா, பல்வேறு வகையாக மரபணு மாற்றமடைந்துள்ளது. இந்த மரபணு மாற்றமடைந்த கரோனா வகைகளில் டெல்டா வகை கரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம், டெல்டா வகை கரோனா, டெல்டா ப்ளஸ்ஸாக (ஏ.ஓய் 42) உருமாற்றம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அண்மையில் பிரிட்டனில், டெல்டா ப்ளஸ் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரிட்டன் விஞ்ஞானிகள் டெல்டா ப்ளஸ் வைரஸ் குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இந்தியாவிலும் டெல்டா ப்ளஸ் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, டெல்டாவைவிட அதிக பரவும் தன்மை கொண்டதாக அறியப்படும் டெல்டா ப்ளஸ், மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டது. இந்தநிலையில், த,மிழ்நாட்டின் அண்டை மாநிலங்களிலும் டெல்டா ப்ளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 7 பேருக்கும், ஆந்திராவில் 7 பேருக்கும் டெல்டா ப்ளஸ் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல், தெலங்கானாவில் இரண்டு பேருக்கு டெல்டா ப்ளஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.