Skip to main content

‘டெல்லி மக்களுக்கு உதவ வேண்டும்’ - உ.பி, ஹரியானா முதல்வர்களுக்கு டெல்லி அமைச்சர் கடிதம்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Delhi Minister's Letter to Chief Ministers of UP, Haryana  for Water scarcity

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்து கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

அந்த வகையில், தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மேலும், டெல்லி குடிநீர் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டெல்லி முழுவதும் 200 குழுக்களை நியமித்து, குழாய்கள் மூலம் வாகனங்களைக் கழுவுவினாலும் தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிந்தாலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘டெல்லியில் கடுமையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியான சமயத்தில் டெல்லி மக்களுக்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா மாநில அரசு கைகொடுக்க வேண்டும். மேலும், பருவமழை வரும் வரை ஒரு மாத காலத்திற்கு டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்