டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவியது. 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. 104 வார்டுகளில் பாஜகவும், 9 வார்டுகளில் காங்கிரசும் வெற்றி பெற்றன. இதன் மூலம் 15 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது.
இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்குப் பின்னர் மேயர், துணை மேயர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், டெல்லியின் துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது பற்றி ஏற்பட்ட மோதலில் மூன்று முறை மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் மற்றும் 6 மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கு டெல்லியின் துணை நிலை ஆளுநர் சக்சேனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் டெல்லி அரசியல் வட்டாரம் பரபரப்பாகக் காணப்படுகிறது.