இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகக் கூறியுள்ளன. டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி தெரிவிப்பதும், ஆக்ஸிஜன் முழுவதுமாக தீர்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், புதிய நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருகின்றன.
டெல்லிக்கு வழங்கும் ஆக்சிஜன் அளவை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இருப்பினும் அது போதுமானதாக இல்லை. இந்தநிலையில் தேவைக்கு மேல் ஆக்சிஜன் இருந்தால், டெல்லிக்கு வழங்கக் கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர், "ஆக்சிஜன் தேவைக்கு அதிகமாக இருந்தால், அதனை டெல்லிக்கு வழங்கக்கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதுகிறேன். மத்திய அரசு எங்களுக்கு உதவுகிறது என்றாலும், கரோனாவின் தீவிரத்தன்மை என்னவென்றால், கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களும் போதுமானதாக இல்லை" எனக் கூறியுள்ளார்.