இந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று (14.04.2021) ஒரேநாளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியானது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியிலும் தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கரோனா நான்காவது அலை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதிகரித்து வரும் கரோனவை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் டெல்லியில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 17,282 பேருக்கு கரோனா உறுதியானது. இதனையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உணவகங்களில் பார்சல் வழங்குவதற்கு மட்டும் டெல்லி அரசு அனுமதித்துள்ளது.