இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியான கோவாக்சின், மக்களுக்குப் பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவாக்சின் தடுப்பூசி, இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகள் மீதும் பரிசோதிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசியை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகளுக்கு செலுத்த தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிபுணர் குழுவின் பரிந்துரையையடுத்து விரைவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் விரைவில் அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "2-18 வயது உடையோருக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மதிப்பீடு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சில குழப்பங்கள் உள்ளன என்பதால் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் 2-18 வயதுடையோருக்கு கோவக்சினை அங்கீகரிக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.