ஆசிரியை அடித்ததில் உயிரிழந்த ஒன்பது வயதான பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும் என்று மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தில் உள்ள சைலா கிராமத்தில் கடந்த ஜூலை 20- ஆம் தேதி அன்று பட்டியலினத்தைச் சேர்ந்த ஒன்பது வயது மாணவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரியர்கள் தண்ணீர் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துள்ளார். இதற்காக, அந்த சிறுவனை ஆசிரியர் அடித்துள்ளார்.
இதில் கண் மற்றும் காதில் காயமடைந்த மாணவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு எஸ்டி/ எஸ்சி சட்டம் மற்றும் முதலமைச்சரின் நிவாரண நிதியின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்படும் எனவும் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.