பொதுமக்கள் தேவைக்காக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் பெரும்பாலான மக்கள், அவசர தேவைக்காக பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டு உபயோகித்து வருகின்றனர்.
ஆனால், அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, ‘பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம், மக்கள் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம். அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த யு.எஸ்.பி போர்டுகளில், மோசடி கும்பல் யு.எஸ்.பி போர்ட் போன்ற கேட்ஜெட்டை மறைமுகமாக பயன்படுத்தி செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் திருட வாய்ப்பு உள்ளது. அதனால், மக்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக போட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.