அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியமும், இங்கிலாந்தும் 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஃபைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்நிலையில் இந்தியா கோவாக்சின் தடுப்பூசிகளை 12-18 வயதானோர் மீது பரிசோதிக்க தொடங்கியுள்ளது.
ஏற்கனவே பாட்னா எய்ம்ஸில், இந்த சோதனை தொடங்கி நடைபெற்ற நிலையில், இன்று டெல்லி எய்ம்ஸிலும் 12-18 வயதானோர் மீதான கோவாக்சின் சோதனை தொடங்கியுள்ளது. இதற்காக 12-18 வயதிற்குட்பட்ட 20-30 பேர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனையும், அவர்களுக்கு கரோனாவிற்கெதிரான ஆன்டிபாடிகள் இல்லையென்பதை உறுதி செய்யும் சோதனையும் நடைபெற்றது.
எய்ம்ஸில் நடைபெறும் இந்த தடுப்பூசி சோதனைக்கு பொறுப்பளரான டாக்டர் சஞ்சய் ராய் இந்த சோதனை குறித்து பேசுகையில், "இந்த சோதனையில் 2 முதல் 18 வயதான 500 க்கும் மேற்பட்டார்கள் பங்குபெறுவர். இந்த சோதனை மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் 12-18 வயதானவர்கள் மீதும், பிறகு 6-12 வயதானவர்கள் மீதும், பின்னர் 2-6 வயதுள்ள குழந்தைகள் மீதும் கோவாக்சின் பரிசோதனை நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பரிசோதனைகள் 6-9 மாதங்கள் வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.