வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது பிரிட்டன் நாட்டை சேர்ந்த சிலர் சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பதவி வகித்தனர். வழக்கு விசாரணைகளில் ஆஜரான வக்கீல்கள் ‘மேன்மை தங்கிய எஜமானரே’ என்னும் பொருள்பட ‘மை லார்ட்’ என்று நீதிபதிகளை அழைத்தனர். இது மரியாதை சார்ந்த மரபாக இருந்து வந்தது.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் காலப்போக்கில் பல உயர் நீதிமன்றங்களில் இந்த பழக்கம் வழக்கொழிந்து போனது. ஆனால், சில நீதிமன்றங்களில் இது இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என குறிப்பிட்டுள்ள அம்சத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடும் வக்கீல்கள் நீதிபதிகளை இனி ‘மை லார்ட்’ என்று அழைக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி தற்போது தெரிவித்துள்ளது குறிப்படத்தக்கது.
நீதிபதிகளை ‘மை லார்ட் அல்லது யுவர் லார்ட் ஷிப்’ என்றழைக்கும் பிரிட்டிஷ் கால முறையை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனைக் கூட்டத்தில், இந்திய அரசியலமைப்பின் சமத்துவத்தை போற்றும் வகையில் நீதிபதிகள் முன்பு உரையாற்றுபவர்கள் ‘மை லார்ட், யுவர் லார்ட்ஷிப்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி நீதிபதிகளை அழைக்க பயன்படும் இதுபோன்ற வார்த்தைகள் விரைவில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இருந்து நீக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.