மேகாலயாவில் ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்த இவர், நவம்பர் 2019 முதல் ஆகஸ்ட் 2020 வரை கோவாவின் ஆளுநராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அண்மைக்காலமாக இவர் வெளியிடும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபத்தில் அவர், தான் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்தபோது அம்பானி தொடர்பான கோப்பும், ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்த நபரின் கோப்புக்கும் அனுமதி அளித்தால், கோப்புக்கு தலா 300 கோடி கிடைக்கும் எனத் தனது செயலாளர்கள் தெரிவித்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் தற்போது அவர் கோவா மாநிலத்தில் நடைபெறும் பாஜக ஆட்சி மீதும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், கோவா அரசு எதைச் செய்தாலும் அதில் ஊழல் இருந்ததாகவும், அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தால்தான் தான் அங்கிருந்து அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இது கோவா அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பதவி விலகவேண்டும் என வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
அதேநேரத்தில் கோவா மாநில பாஜக தலைவர், கவர்னர் சத்யபால் மாலிக் தனது வார்த்தைகளில் தவறு செய்துள்ளார். இதை மத்திய தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்" எனக் கூறியுள்ளார். கோவாவில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சத்யபால் மாலிக் இந்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.