இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று (07/06/2021) மாலை 05.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, "இந்தியாவில் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையைத் தொடங்கியுள்ளோம். குழந்தைகளுக்கு அளிப்பதற்காக இரண்டு தடுப்பூசிகள் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க கடைசி வரைத் தடுப்பூசியைக் கொண்டு செல்ல வேண்டியது கடமை. எப்போதும் கிடைக்கும் வகையில் தடுப்பூசி உற்பத்தி நிரந்தரமாக இருக்கும். ஒரே ஆண்டில் இரண்டு கரோனா தடுப்பூசிகளை இந்தியா அறிமுகம் செய்திருக்கிறது. தடுப்பூசி மட்டும் சரியான நேரத்தில் தயாராகாமல் இருந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதுவரை 23 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இந்தியா குறித்த உலக நாடுகளின் சந்தேகத்திற்குத் தடுப்பூசி மூலம் தீர்வு கண்டிருக்கிறோம்.
ஏழைகள் மீதுள்ள கவலைக் காரணமாக மத்திய அரசு விரைந்து தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தடுப்பூசிக்கான ஏற்பாடுகளைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே மத்திய அரசு தொடங்கிவிட்டது. வரும் நாட்களில் கரோனா தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும். மேலும் மூன்று புதிய கரோனா தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். இந்த மூன்று தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. மூக்கின் வழியாகச் சொட்டு மருந்து போல செலுத்தக் கூடிய தடுப்பு மருந்தும் பரிசோதனையில் உள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளைத் தயாரித்து மக்களுக்குச் செலுத்தி வருவது இந்தியாவின் சாதனை. கரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் தீரும்". இவ்வாறு பிரதமர் கூறினார்.