புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (16/06/2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "இந்திய பிரதமர் நரேந்திரமோடி மாநில முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலமாகப் பேசினார். மத்திய அரசு கருத்துகளைக் கேட்கிறதே தவிர மாநில அரசுகள் வைக்கின்ற கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதில்லை.
குறிப்பாக கரோனா சம்மந்தமான கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறார்களே தவிர தேவையான நிதியுதவி பற்றி மத்திய அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. ஆனால் இந்த முறை நிதிப்பற்றாக்குறையை பிரதமர் கவனத்தில் எடுத்துக்கொண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. புதுச்சேரியில் கரோனா பரவுவதற்குக் காரணம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளிருந்து புதுச்சேரிக்கு மருத்துவத்திற்காக வருவர்களாலும், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களாலுமே பரவுகிறது.
ஏற்கனவே கோயம்பேட்டிலிருந்து வந்தவர்களால் புதுச்சேரியில் கரோனா தொற்று வந்தது. ஆகையால் முழுமையாக எல்லைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இ-பாஸ் வைத்திருந்தாலும் கூட மாநில அரசின் அனுமதியின்றி சென்னையிலிருந்து வருபவர்கள் யாரையும் உள்ளே விடக்கூடாது. அவர்கள் அப்படி வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளிலிருந்து மருத்துவத்திற்காக வருகிறவர்கள், குறிப்பாக, டயாலிசிஸ் நோயாளிகள் மற்றும் பிரசவத்திற்குத் தவிர மற்ற யாரையும் உள்ளே விடக்கூடாது என மிகத் தெளிவாகக் கட்டளையிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் வரும்போது நோய்த் தொற்று இல்லை எனச் சான்றிதழுடன் வந்தால் தான் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
புதுச்சேரியில் கடைகள், மதுக்கடைகள், ஓட்டல்கள் திறக்கின்ற நேரம் மாறி இருக்கிறது என்பதால் பலர் அதைக் காரணம் காட்டி வெளியே சுற்றுகின்றனர். எல்லாவற்றுக்கும் ஒரே நேரம் இருக்கவேண்டும் எனக் கருத்துக் கூறப்பட்டது. ஆகையால் கடைகள் நேரங்களைக் குறைப்பது குறித்து வியாபாரிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எல்லைப் பகுதிகளை மூடி வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருந்தால் கரோனா கட்டுப்படுத்தப்படும்.
அதேபோல் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என்றால் அதிக அபராதம் விதிக்கப்படும். முகக்கவசம் அணியவில்லை என்றால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும்". இவ்வாறு புதுச்சேரி முதல்வர் கூறினார்.