கேரளாவில் கரோனா பாதிப்பு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிக அதிகமாக இருந்து வருகிறது. தினசரி பாதிப்பு 20 ஆயிரம் என்ற அளவில் தொடர்ந்து இருந்து வருகிறது. எப்போதும் குறைவாக இருந்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கையும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து உள்ளது. இதற்கிடையே இந்தியாவிலேயே கரோனா தீவிரமான உள்ள இந்த நிலையில் அம்மாநில அரசு 11ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த முடிவு செய்திருந்தது.
கரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் போது தேர்வு நடத்துவதா? என்று சிலர் எதிர்ப்பு தெரவித்த நிலையில், உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இன்று மட்டும் 26,200 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 26,209 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.