Skip to main content

ஆன்ட்டிஜன் கிட் மூலம் ஒரு மணி நேரத்தில் கரோனா பரிசோதனை முடிவுகள்-முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு!

Published on 30/08/2020 | Edited on 30/08/2020
 Corona test results in an hour through antigen kit-Chief Narayanasamy announcement

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று  வெளியிட்டுள்ள வீடியோ பதிவிலான செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அன்லாக் 4 என்கிற மத்திய அரசின் அறிவிப்பின் படி அரசியல் நிகழ்ச்சிகள், மத நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் புதுச்சேரியில் நடத்தப்படும். மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் மாநில அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க கூடாது என்பதிலிருந்து மத்திய அரசு ஊரடங்கு பிறப்பிப்பதால் தொற்று குறையாது என்பதை உணர்த்துகிறது.

புதுச்சேரியில் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும். இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.  இது மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆன்டிஜன் கிட் மூலம் தினந்தோறும் 3,000 பேருக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் முடிவு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறையை குறைக்க 488 பேர் புதிதாக நியமிக்கப்படுவார்கள். ஜிப்மர் மருத்துவமனையில் புதிதாக 700 படுக்கைகள் மற்றும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 600 படுக்கைகள் ஆக்சிசன் வசதியோடு இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை கட்டணத்தை அரசே செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் Remdesivir மருந்து வாங்கப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு செலுத்தப்படும். மேலும் ஆயுர்வேதா, சித்தா முறையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்க காரணம் மக்கள் விழிப்புணர்வு இல்லாததுதான். புதுச்சேரியில் இறப்பு விகிதத்தை குறைக்க மருத்துவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்