![corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/ewBz6tBjv6SzIwY8N2eCbudBEjQ547lTTdnbGducwq0/1620884569/sites/default/files/inline-images/New%20Project%20%281%29_2.jpg)
இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இருப்பினும், கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையவில்லை. இந்தியாவில் நேற்று (12.05.2021) ஒரேநாளில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 720 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவில் தினசரி கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் கரோனா பாதிக்கப்பட்ட 4,136 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த மூன்று நாட்களாக, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் புதிய கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 10ஆம் தேதியிலிருந்து உலகில் பதிவாகும் புதிய கரோனா பாதிப்புகளில் 50 சதவீதத்திற்கு மேல் இந்தியாவில்தான் பதிவாகிறது.
கடந்த சில நாட்களை மட்டும் வைத்துப் பார்த்தால், உலகிலேயே அதிகம் பாதிக்கபட்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. அதாவது, தற்போது உலகின் மூன்றில் ஒரு பங்கு கரோனா உயிரிழப்புகள் இந்தியாவில்தான் ஏற்படுகின்றன. அதிக புதிய பாதிப்புகளும் இந்தியாவில்தான் உறுதிசெய்யப்படுகின்றன. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மூன்று லட்சத்திற்கும் மேலாக இருக்கும் நிலையில், இந்தியாவிற்கு அடுத்து அதிக தினசரி பாதிப்பு உறுதி செய்யப்படும் நாடான பிரேசிலில், தினமும் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே கரோனா உறுதிசெய்யப்படுகிறது. மேலும், தினசரி கரோனா உயிரிழப்புகள் வேறு எந்த நாட்டிலும் 1000த்தை தாண்டாத நிலையில், இந்தியாவில் இரண்டவாது நாளாக கரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4000த்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.