இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்துள்ளது. தினசரி கரோனா பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்திவருகின்றன. இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், “இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை” என எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹர்ஷவர்தன், "கரோனாவின் இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை. டெல்லியில் வழக்குகள் நிச்சயமாகக் குறைந்துவிட்டன, ஆனால் நமது 1.5 வருட அனுபவம், எந்தச் சூழ்நிலையிலும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்படக் கூடாது என கூறுகிறது. மக்களும் சமூகமும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைத் தளர்த்திக்கொள்ள அனுமதிக்கக் கூடாது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், "அதிர்ஷ்டவசமாக, கடந்த 6 மாதங்களாக தடுப்பூசியும் இருக்கிறது. எனவே, கரோனா பாதுகாப்பு நடைமுறை மூலமாகவும், மேலும் அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி போடுவதன் மூலமாகவும், இனி வரவிருக்கும் காலத்தில் கரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றியைப் பெறலாம்" என கூறியுள்ளார்.