இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டைவிட கரோனா பரவும் வேகம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 45,384 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை, ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 794 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்திலும் கரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், போதிய படுக்கைகள் இல்லாததால் கரோனா நோயாளிகளைத் தரையில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ஒருவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.