புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று கரோனா தொற்றின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில், முதன்முறையாக இன்று தொற்றின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரியில் 79 நபர்களுக்கும், காரைக்காலில் 25 நபர்களுக்கும், ஏனாமில் 8 நபர்களுக்கும் என ஒரே நாளில் 112 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் 353 பேரும், ஜிப்மரில் 109 பேரும், கொவைட் கேர் சென்டரில் 31 பேரும், காரைக்காலில் 35 பேரும், ஏனாமில் 20 பேரும், மாஹேவில் 7 பேரும் என மொத்தம் 553 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே இன்று 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை கரோனா தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் முழுவதும் 21,865 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 441 பேருக்கு சோதனை முடிவுகள் வெளிவரவேண்டி உள்ளதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் முதன்முறையாக தொற்றின் எண்ணிக்கை 100- ஐ தாண்டியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் சமூக விழிப்புணர்வோடு செயல்படவிலை எனில் தொற்றின் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதனிடையே புதுச்சேரி ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து ஆளுநர் மாளிகை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அலுவலகம் 48 மணி நேரத்துக்கு மேலாக மூடப்படுகிறது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உட்பட அனைத்து ராஜ்நிவாஸ் ஊழியர்களுக்கும் உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாதவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிரண்பேடி இதுவரை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.