Controversy over Congress leader's speech about pakistan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில், ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாகவும், ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும், மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்தத் தேர்தல், ஜூன் 4ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோவில்செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அணுகுண்டு வைத்திருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா மரியாதை கொடுக்க வேண்டும். நாம் அவர்களுக்கு மரியாதை கொடுக்காவிட்டால், இந்தியாவுக்கு எதிராக அணுகுண்டைப் பயன்படுத்த நினைப்பார்கள். அவர்களிடம் பேச வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, நாம் நமது இராணுவ வலிமையை அதிகப்படுத்துகிறோம். இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது. மேலும் அவர்களிடம் அணுகுண்டுகள் உள்ளன. ஒரு பைத்தியக்காரன் இந்தியாவில் குண்டுகளை வீச முடிவு செய்தால் என்ன நடக்கும்?

அதே போலஒரு பைத்தியக்காரன் லாகூரில் வெடிகுண்டு வீச முடிவு செய்தால், அதன் கதிர்வீச்சு அமிர்தசரஸை அடைய 8 வினாடிகள் எடுக்காது” என்று பேசியுள்ளார். இந்த வீடியோவை பா.ஜ.க பகிர்ந்து கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “இந்தத்தேர்தல்களில் ராகுல் காங்கிரஸின் சித்தாந்தம் முழுமையாக தெரிகிறது. யாசின் மாலிக், எஸ்.டி.பி.ஐ போன்ற உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவது, அபரிமிதமான ஊழல் மற்றும் ஏழைகளுக்கான பணம் கொள்ளை, மக்களைப் பிரித்தல், பொய்கள், துஷ்பிரயோகம் மற்றும் போலி உத்தரவாதங்கள் மூலம் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களைத்தவறாக வழிநடத்துவது ஆகியவை காங்கிரஸ் கொள்கைகள் ஆகும்” என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கேரா தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில், “சில மாதங்களுக்கு முன்பு பேசிய மணிசங்கர் அய்யரின் பழைய பேட்டியின் சில கருத்துக்களில் இருந்து காங்கிரஸ் முற்றிலும் உடன்படவில்லை. இந்தப் பழமையான மற்றும் பொருத்தமற்ற கருத்துக்கள், பிரதமர் மோடியின் அன்றாட தவறான செயல்கள் மற்றும் தொடர்ந்து அலைக்கழிக்கும் பிரச்சாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக பா.ஜ.க.வால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது என்பதை தேசம் புரிந்து கொண்டுள்ளது. மணிசங்கர் அய்யர் கட்சியை எந்த விதத்திலும் எந்த மேடையிலும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment