கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், சித்தராமையா தனது முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன.
இதற்கிடையில், இந்த வழக்கில் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகுவார் என்றும் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும் காங்கிரஸ் அமைச்சர்கள் டி.கே சிவக்குமார், பரமேஷ்வரா சதீஷ் ஜார்கிஹோரி உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ரகசிய கூட்டம் நடத்துவதாக தகவல் வெளியானது. இதனால், சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, துணை முதல்வர் டி.கே சிவகுமார், சதீஷ் ஜார்கிஹோரி ஆகியோர், சித்தராமையாவே முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று உறுதியளித்தனர்.
இந்த நிலையில், பெலகாவி பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோரிக்கு ஆதரவாக பேனர் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்னா வேதிகே அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், சதீஷ் ஜார்கிஹோரி தான் வருங்கால முதல்வர் என்று இடம்பெற்றிருக்கிறது. மூடா வழக்கில் சித்தராமையா முதல்வர் பதவியை இழப்பார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், இந்த பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.