காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80. ஆஸ்கார் பெர்னாண்டஸ் 1980 ஆம் ஆண்டு முதன்முறையாக உடுப்பி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அதேதொகுதியிலிருந்து மேலும் நான்குமுறை அவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984-85 ஆம் ஆண்டுகளில் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசின் நாடாளுமன்ற செயலாளராகவும் இருந்துள்ள ஆஸ்கார் பெர்னாண்டஸ், 1999-ல் மக்களவை தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும், அதன்பின்னர் காங்கிரஸ் அவரை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியது.
பல்வேறு துறைகளின் மத்திய இணையமைச்சராகவும் பதவி வகித்துள்ள ஆஸ்கார் பெர்னாண்டஸ், போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை ஆகிய துறைகளின் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவராக ஆஸ்கார் பெர்னாண்டஸ் கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.