ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அசோக் கெலாட் ஆட்சியையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதன்படி, சில தினங்களுக்கு முன் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பா.ஜ.க சார்பில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து, நேற்று (02-10-23) இரண்டாவது முறையாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்த பிரதமர் மோடி, சித்தோர்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “காங்கிரஸ் அரசின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவெடுத்து விட்டனர். அசோக் கெலாட் அரசு, ராஜஸ்தான் இளைஞர்களின் ஐந்தாண்டு காலத்தை வீணடித்துவிட்டது. ராஜஸ்தானில் விரைவில் மாற்றம் வரும். இந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தான் மாநிலத்தை சீரழித்து விட்டது. குற்றங்களில் எண்ணிக்கை பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடமாக இருப்பது எனக்கு மிகுந்த வலியை தருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலானவை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தான் வருகிறது. இதற்காகவா நீங்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தீர்கள்” என்று பேசினார். பிரதமர் மோடி தொடர்ந்து ராஜஸ்தான் அரசையும், அசோக் கெலாட்டையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இது குறித்து முதல்வர் அசோக் கெலாட்டின் சிறப்பு அதிகாரியான லோகேஷ் சர்மா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக ராஜஸ்தானுக்கு பிரதமர் மோடி வந்திருக்கிறார். ராஜஸ்தானை பற்றி தவறாக பேசுவதற்கு முன் பா.ஜ.க ஆளும் மாநிலங்களை பற்றி நினைத்து பார்க்க வேண்டும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் நிலைமை தான் என்ன?. உங்களின் அரசியல் ஆதாயத்துக்காக ராஜஸ்தானைப் பற்றி அவதூறைப் பரப்புவதற்கு முன் மணிப்பூரைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்.
பிரதமர் மோடி உரையாற்றுவதில் வல்லவர். நாடு முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களில் இத்தனை பிரச்சனைகள் இருக்கும்போது அவர் ராஜஸ்தானை மட்டும் குறிவைத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். பல மாநில அரசுகள் ராஜஸ்தானை தான் பின்பற்றுகின்றன. ராஜஸ்தான் அரசால் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கவும், விலைவாசி உயர்வுக்கு மத்தியில் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்றால், மத்திய அரசால் ஏன் இது போன்ற நடவடிக்கைகளை செய்ய முடியவில்லை?” என்று பதிவிட்டுள்ளார்.