குஜராத்தில் போலி கால்பந்தாட்ட பந்தய செயலி மூலம், சீனர் ஒருவர் ரூ.1400 கோடி மோசடி செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த வூ உயன்பே என்பவர் இந்தியர்கள் சிலருடன் சேர்ந்து ஆன்லைன் கால்பந்தாட்ட செயலியை உருவாக்கினார். இந்த செயலியை பயன்படுத்தி குஜராத் உள்ளூர் மக்கள் பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளனர். அதன் பின்னர் இந்த செயலியின் பயன்பாடு திடீரென்று செயல்படாமல் போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர் . இந்த செயலி மூலம், சீனாவை சேர்ந்த வூ உயன்பே வெறும் 9 நாளில் சுமார் ரூ.1400 கோடி மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி சீனாவுக்கு சென்றுவிட்டார். இது குறித்து குஜராத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் இதுவரை 9 பேர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், “ எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைக்க அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. ஆனால், இந்தியர்களை ஏமாற்றி மோசடி செய்த சீனா நாட்டை சேர்ந்த வூ உயன்பே மீது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் எல்லையில் உள்ள குஜராத்தில் பதற்றமான நகரங்களில் சீனா நாட்டவர் தங்கி ஒன்பது நாட்களில் 1200 பேரிடம் சுமார் ரூ.1400 கோடி மோசடி செய்து நாட்டை விட்டு சீனாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் இருந்த மாநிலத்தில் இத்தகைய மோசடி நடந்துள்ளது. அவர்கள் இது மாதிரியான மோசடியை தடுக்க முடியாது. பிரதமருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறார். இந்த மோசடி குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி மற்றும் இப்போது வூ உயன்பே என தொடர்ந்து மக்களை ஏமாற்றி மோசடி செய்து தப்பித்து வருகிறார்கள்.
ஆனால், அவர்கள் மீது மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்மூலம், பிரதமர் மோடி, அரசு பொது பணத்தின் பாதுகாவலர் அல்ல என்பது தெரிகிறது. மாறாக, அவர் மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல விரும்பும் நபர்களுக்கு உதவும் பயண நிறுவனமாக செயல்படுகிறார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
சீன நபரின் மோசடி குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் வரை குஜராத் காவல்துறைக்கு 1088 புகார்கள் வந்துள்ளன. மேலும், ஹெல்ப்லைன் மூலம் 3600க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், மோடி அரசு சீன செயலியை தடை செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவில் இருந்து தப்பி செல்வதற்கு முன் விசாரணை அமைப்புகள் அவரை ஏன் கைது செய்யவில்லை. விசாரணை அமைப்புகள் அரசியல் எதிரிகளுக்கு மட்டும் விசாரணை செய்து வருகின்றன. இது தான் மோடி மற்றும் அமித்ஷாவின் செயல்திட்டமா?" என்று கேள்வி எழுப்பினார்.