மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சி மேற்கொண்டுள்ள தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு இழுக்க காங்கிரஸ் கட்சி புதிய வியூகம் வகுத்துள்ளது. இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகிய இருவரும் சந்திரபாபுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், இவர்களை சமாதானப்படுத்தி காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில கட்சிகளின் கூட்டணியில் இணைக்க சரத்பவார் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதே போல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளிடம் சேராத மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சியை கைப்பற்றும் எனவும், அதிக மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பில் கூறி உள்ளதால் சரத்பவாரின் தொலைப்பேசி அழைப்பை ஏற்க ஜெகன் மோகன் ரெட்டி மறுத்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் சரத்பவார் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சந்தித்து காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.